சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

துபாய், சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பிடிபட்டது.

Update: 2022-03-27 10:17 GMT
சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் சமது (வயது 26) என்ற பயணி வெளியே நடந்து செல்ல முயன்ற போது, சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர்.

அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.72 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 486 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதைத்தொடர்ந்து சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த முகமது ஜாசீர் (27) என்பவரை சோதித்த போது, அவரது உள்ளாடைக்குள் இருந்து ரூ.42 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 880 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில், 2 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 366 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக கேரள வாலிபர் உள்பட 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்