முத்துமாரியம்மன் கோவில் திருவிழா; பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்

தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2022-04-05 17:58 GMT
கரூர், 
கோவில் திருவிழா
தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று அமராவதி ஆற்றிலிருந்து மாரியம்மனுக்கு கம்பம் பாலித்து வந்து கம்பம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடந்தது.
கடந்த 1-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று முத்துமாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. 
பூக்குழி இறங்குதல்
விழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துமாரியம்மன், பகவதியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் மற்றும் அலகு குத்திக்கொண்டும் கோவிலுக்கு வந்தனர்.தொடர்ந்து கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ந் தேதி மாலை 5 மணிக்கு மாரியம்மன் கம்பம், பகவதியம்மன் கரகம் அமராவதி ஆற்றில் கொண்டு விடுதல் நிகழ்ச்சியும், வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்