பாரம்பரிய வழக்கப்படி 4 ஏர்பூட்டி உழுத விவசாயிகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில் நிலத்தில் பாரம்பரிய பழக்க வழக்கபடி 4 ஏர் பூட்டி விவசாயிகள் உழுதனர்.

Update: 2022-04-14 20:43 GMT
திருப்பரங்குன்றம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில் நிலத்தில் பாரம்பரிய பழக்க வழக்கபடி 4 ஏர் பூட்டி விவசாயிகள் உழுதனர்.
பாரம்பரியம்
நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் போற்றப்படுகின்றனர். விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது நிலத்தில் ஏர் பூட்டி ஆழமாக உழுது விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தற்போது நவீன எந்திரங்களைக் கொண்டு நிலத்தில் உழுது விவசாயம் செய்து வருகிறார்கள். கம்ப்யூட்டர் காலத்திற்கு ஏற்ப அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருவதால் ஏர்கலப்பைகள், தார்குச்சிகள் என்பது உள்பட பழங்கால விவசாய கருவிகள் காண்பது அரிதாக மாறி வருகிறது. 
இதேசமயம் திருப்பரங்குன்றம் விவசாயிகள் பாரம்பரிய பழக்க வழக்கத்தை இன்றும் தொன்றுதொட்டு நடைமுறைப்படுத்தி வருவதுதான் விவசாயத்தில் பொக்கிஷமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் பாரம்பரிய பழக்க வழக்கத்தின் படி விவசாய பணியின் தொடக்கமாக 4 ஏர் பூட்டி நிலத்தை உழுதல் தொன்றுதொட்டு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
 4 ஏர் பூட்டுதல்
அதன்படி தமிழ் புத்தாண்டு தினமான நேற்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோவில் நிலத்தில் 4 ஏர்கலப்பையில் 8 எருதுகள்(மாடுகள்) பூட்டி விவசாயிகள் உழுதனர். அப்போது அவர்கள் விவசாயம் செழிக்க கனமழை பெய்ய வேண்டும் என்று வயலில் சூடம் ஏற்றி வழிபட்டனர். 4 ஏர்களில் பூட்டிய மாடுகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள்
இந்த நிலையில் விவசாயிகள் ஒவ்வொருவரும் புதிய தார்குச்சிகளில் ஆணி அறைந்து அதில் பூச்சூடினர். மேலும் தார் குச்சியை கையில் பிடித்தபடியே திருப்பரங்குன்றம் கோவில்வாசலில் இருந்துபுறப்பட்டு கிரிவலம் வந்தனர். முன்னதாக கல்வெட்டு குகை கோவில் வளாகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் சலவை தொழிலாளி, முடிதிருத்தும் தொழிலாளி, மடை திறக்கும் தொழிலாளி மற்றும் கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் நடப்பு ஆண்டிற்கு விலை உயர்வுக்கு ஏற்ப கூலி நிர்ணயம் செய்து தொடர்பாக பேசினார்கள். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாய், நிலையூர்கண்மாய், செவந்தி குளம், பானாங்குளம், ஆரியன் குளம், குறுக்கிட்டான்குளம் ஆகிய 7 கண்மாய் பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்தனர். அப்போது மழை பெய்து கண்மாய்கள் நிரம்ப வேண்டும் என்று வழிபட்டனர்.

மேலும் செய்திகள்