கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தார்கள்.

Update: 2022-04-22 20:58 GMT
சத்தியமங்கலம்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தார்கள். 
கர்நாடக சிறுமி
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தன்னுடைய மனைவி, 13 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகள் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பரிசபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். 
இதற்கிடையே கடந்த 6 மாதத்துக்கு முன் சாம்ராஜ் நகரை சேர்ந்த அந்த தொழிலாளியும், அவருடைய மனைவியும் இறந்துவிட்டனர். இதனால் 13 வயது சிறுமி பரிசபாளையத்தில் உள்ள அக்காள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.
காதல் மலர்ந்தது
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தேசிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் நாகராஜன் கட்டிட வேலைக்கு அடிக்கடி பரிசபாளையம் சென்று வந்தார். அப்போது பழக்கம் ஏற்பட்டு நாகராஜனுக்கும், 13 வயது சிறுமிக்கும் இடையே காதல் மலர்ந்தது.  2 மாதம் காதலித்து வந்த இவர்கள் திடீரென யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார்கள். இதற்கு நாகராஜனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோரை விட்டு வந்து தேசிபாளையத்திலேயே தனியாக வீடு எடுத்து சிறுமியுடன் நாகராஜன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 
போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்து நாகராஜன் குடும்பம் நடத்துவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றுக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்கள் இதுபற்றி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்கள். உடனே மகளிர் போலீசார் நாகராஜனின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி அவரை போக்சோவில் கைது செய்தார்கள். மேலும் 13 வயது சிறுமியை மீட்டு பரிசபாளையத்தில் உள்ள அவருடைய அக்காளிடம் ஒப்படைத்தார்கள். 

மேலும் செய்திகள்