கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-04-23 10:28 GMT
திருத்தணி,  

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வரும் பணிகளை 27 ஊராட்சிகளுக்கும் சமமாக பங்கிட்டு தரவேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒன்றிய அலுவலகத்தில் மரியாதை கொடுப்பதில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர் முறையை கைவிட்டு ஒன்றிய அளவில் டெண்டர் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். ஊராட்சி மன்ற தலைவர்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்