1,392 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 1,392 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-27 21:09 GMT
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 1,392 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 91.3 சதவீத பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், 70.9 சதவீத பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் 7.4 சதவீத பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தடுப்பூசி முகாம்
இந்த நிலையில் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,392 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 15 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக மாவட்ட மற்றும் ஊராட்சி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து வீடு, வீடாக சென்று இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வழிவகை ஏற்படுத்தப்படும். 
முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களும் மற்றும் தகுதியுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொள்ளவும் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா, மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் நளினி, ஜெமினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்