கீரனூர் தாலுகா அலுவலகம் முன்பு 2 முதியோர்கள் உண்ணாவிரதம்

வீட்டுமனை கேட்டு கீரனூர் தாலுகா அலுவலகம் முன்பு 2 முதியோர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2022-04-29 19:18 GMT
கீரனூர், 
மாத்தூர் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 67 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு வீட்டுமனை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த முதியவர்களான பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குளத்தூர் தாசில்தாரிடம் மனு கொடுத்து உள்ளனர். இவர்களின் கோரிக்கை மனு அதிகாரி தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தியும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக கூறி கீரனூர் தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அவர்கள் மாலை வரை தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து இருந்தனர். இதையடுத்து, குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி மற்றும் துணை தாசில்தார் மணி ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்துக்குள் மாத்தூர் பகுதியில் வீட்டுமனை ஒதுக்கி தருவதாக உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்