ஈரோட்டில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவ -மாணவிகளுக்கான வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டி; 500 பேர் பங்கேற்பு

ஈரோட்டில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவ -மாணவிகளுக்கான வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். இதில் 500 பேர் பங்கேற்றனர்.

Update: 2022-04-29 20:40 GMT
ஈரோட்டில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவ -மாணவிகளுக்கான வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். இதில் 500 பேர் பங்கேற்றனர்.
தடகள விளையாட்டு போட்டி
பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான 14 வயதுக்கு உள்பட்ட மாணவ -மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘மாணவ -மாணவிகள் அனைவரும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். குழுவாக செயல்படும்போது மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று இணைப்பாடத்திட்டங்களும் முக்கியமாக உள்ளது. ஏனெனில் அப்போது தான் முழுமையான வளர்ச்சி அடைய முடியும். பள்ளி நிர்வாகமும், ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். அப்போது தான் அவர்களுடைய எதிர்காலம் மற்றும் வளர்ச்சி என்பது மிகவும் சிறப்புடையதாக அமையும்’ என்றார்.
500 பேர் பங்கேற்பு
இதில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. ஈரோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட 60 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மேலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகள் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட உடற்கல்வி இயக்குனர் ராஜ்குமார், உடல் கல்வி ஆசிரியர் கிறிஸ்டோபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்