ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-29 20:43 GMT
சேலம்:-
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவர்கள்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. இங்கு அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த அசோக் (வயது 38), 4 ரோட்டை சேர்ந்த பிரபு (34), சாமிநாதபுரத்தை சேர்ந்த நாராயணன் (52), மணக்காட்டை சேர்ந்த வேல்முருகன் (52), சொர்ணபுரியை சேர்ந்த மணிகண்டன் (42), கோரிமேட்டை சேர்ந்த இளங்கோவன் (32) ஆகிய 6 பேரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
இந்த 6 பேரும் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் நுழைவு வாயில் முன்பு வந்ததும் தாங்கள் பாட்டிலில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை திடீரென தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது தண்ணீரை போலீசார் ஊற்றினர்.
மிரட்டுகின்றனர்
பின்னர் ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:- 
நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். இந்த நிலையில் சிலர் எங்களை புதிய பஸ்நிலையத்தின் சில பகுதியில் ஆட்டோ ஓட்டக்கூடாது என்று மிரட்டி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்றும் தொந்தரவு செய்கின்றனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ேதாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் மீதும் சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்