மாணவிகள் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுரை

அரசு தேர்வுகளில் வெற்றி பெற மாணவிகள் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

Update: 2022-04-30 17:57 GMT
நாகா்கோவில்:
அரசு தேர்வுகளில் வெற்றி பெற மாணவிகள் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
மாணவிகளுடன்                           கலந்துரையாடல்
நாகர்கோவில் கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுடன் கலெக்டர் அரவிந்த் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி? மற்றும் உயர் கல்வி குறித்தும் கலெக்டர் அரவிந்த் மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அந்த சமயத்தில் மருத்துவப்படிப்பு, சி.ஏ., படிப்பிற்கான சேர்க்கை, வங்கி பணிக்கான சேர்க்கை போன்றவை குறித்து மாணவிகள் பல்வேறு கேள்வி மற்றும் சந்தேகங்களை கேட்டனர். அதற்கு கலெக்டர் அரவிந்த் விளக்கம் அளித்தார்.
நீட்- ஐ.ஏ.எஸ். தேர்வுகள்
மேலும் இதுபோக மாணவிகளிடையே கலெக்டர் அரவிந்த் பேசுகையில் கூறியதாவது:-
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கல்வி. தற்போது உள்ள நவீன தொழில்நுட்ப காலத்தில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். நீட் தேர்வு, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி விடாமுயற்சியுடன் படித்து தேர்வுகளை சந்தித்து வெற்றி பெற வேண்டும். இதுபோன்ற தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் பொது அறிவை தினமும் வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து அதில் சாதனை படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அதிகாரி புகழேந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் நல்லபாக்கியலெட் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பேட்டி
இதனை தொடர்ந்து கலெக்டா் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாணவிகளுடன் கலந்துரையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
குமரியில் 615 குளங்களில் மணல் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குளங்களில் இருந்து மணல் எடுக்கவும், அவர்களிடம் எவ்வளவு நிலம் உள்ளதோ அந்த அளவிற்கு மணல் எடுக்கவும் அனுமதி வழங்கப்படும் என்றார்.
---

மேலும் செய்திகள்