தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது வழக்கு

தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-05-01 22:09 GMT
ஈரோடு
தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விடுமுறை
தொழிலாளர் தினமான நேற்று அனைத்து நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அவசரம் காரணமாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்குவதற்கான முன்அறிவிப்பு கொடுத்து இருக்க வேண்டும்.
சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தொழிலாளர்களுக்கு முறையாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா? அல்லது பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் கொடுக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டது.
85 நிறுவனங்கள்
ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 50 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் 32 கடை நிறுவனங்களிலும், 52 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 45 நிறுவனங்களிலும், 12 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 8 நிறுவனங்களிலும் விடுமுறை அளிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 85 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்