போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.4½ கோடி அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.4½ கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-05-03 23:31 GMT
திருச்சி:

கடந்த 4 மாதங்களில்...
திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், விபத்துகளை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறுகளை சீர்செய்யவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடப்பு ஆண்டில் கடந்த 4 மாதங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச்சென்றவர்கள், அதிவேகமாக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியவர்கள், செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவர்கள், சிக்னல் விதியை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
ரூ.4 கோடியே 70 லட்சம்
இதில் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து விதியை மீறிய 3 லட்சத்து 83 ஆயிரத்து 24 பேருக்கு சுமார் ரூ.4 கோடியே 70 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன விபத்துகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறின்றி சீராக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்