தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-05-06 22:08 GMT
புதுக்கோட்டை:

சொத்து பிரச்சினை
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை அருகே உலங்கத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிமுத்து(வயது 43). கூலித்தொழிலாளி. சங்கிலிமுத்துவின் அக்காள் அமுதாவின் கணவர் ராமராசு. இவர் மனைவியை பிரிந்து வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமராசுவிடம் தனது அக்காளுக்கு சேர வேண்டிய சொத்துக்களை கொடுக்கும்படி சங்கிலிமுத்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கு ராமராசு மறுத்துள்ளார். இதனால் சங்கிலிமுத்து ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22-1-2018 அன்று ராமராசுவை கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் சங்கிலிமுத்து வெட்டினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இது குறித்து ராமராசுவின் சகோதரர் உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலிமுத்துவை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ராமராசுவை கொலை செய்ய முயன்றதற்காக சங்கிலிமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் 6 மாத சிறை தண்டனையும், தகாத வார்த்தையால் திட்டியதற்கு 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சங்கிலிமுத்து, 10 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்