நடு நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி சென்னை கோட்டை நோக்கி புறப்பட்ட பொதுமக்கள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

நடு நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி சென்னை கோட்டை நோக்கி புறப்பட்ட பொதுமக்கள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Update: 2022-05-09 16:44 GMT

புதுப்பேட்டை

பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்வதாக பொதுமக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சேதுராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நத்தம் கிராமத்திலிருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் செல்ல தயாராக இருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், கனகராஜ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் இந்த கோரிக்கை தொடர்பாக பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பு சேதுராஜன், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சேதுராஜன், வட்டார கல்வி அலுவலர் செல்வம், எஸ்.எஸ்.பி.மாவட்ட தலைவர் தஷ்ணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்