அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

பண்ருட்டி அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-10 17:44 GMT
பண்ருட்டி

பண்ருட்டி அருகே உள்ள சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன்(வயது 52). அரசு பஸ் கண்டக்டரான இவர் பண்ருட்டி-குள்ளஞ்சாவடி பஸ்சில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பண்ருட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குள்ளஞ்சாவடி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. 

ஆண்டிக்குப்பம் அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து பேசிக் கொண்டிருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் கண்டக்டர் பாலன் பஸ்சில் இருந்து இறங்கி மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு கூறி மர்ம நபர்களை கண்டித்தார். ஆனால் அவர்கள் அகற்ற மறுத்ததால் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் பாலனை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

பின்னர் இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் பாலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து கண்டக்டர் பாலனை தாக்கியவர்கள் ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் சிவமணி(35), புளிமூட்டை மகன் பிரபு(25) என்பது  தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்