ராஜபக்சே நாட்டை விட்டே ஓட அரசியல் கொள்கை தான் காரணம் தொல்.திருமாவளவன் பேட்டி

ராஜபக்சே நாட்டை விட்டே ஓட அரசியல் கொள்கை தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2022-05-10 18:25 GMT
நாகர்கோவில்,
ராஜபக்சே நாட்டை விட்டே ஓட அரசியல் கொள்கை தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தொல்.திருமாவளவன் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், அதனை ஒட்டியுள்ள கிராமங்கள் குளத்தூர், நாவல்காடு, தாழக்குடி, மேல தத்தையார்குளம், பதினெட்டாம்படி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கோர்ட்டின் பெயரால் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவு எடுக்க வேண்டும். 
அதேபோல் காவல்துறை, நீதித்துறையின் கட்டுப்பாட்டில் விசாரணை கைதிகளாக இருப்பவர்கள் திடீரென உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதை சீர்செய்வதற்கு, சிறப்பான விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ராஜபக்சே
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் போராட்டம், இந்தியாவுக்கும் ஒரு படிப்பினை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இன்று ராஜபக்சே பதவியில் இருந்து விலக, நாட்டை விட்டே ஓட, குடும்பத்தோடு தப்பித்து ஓடுவதற்கு அவர்களின் கடந்தகால அரசியல் முடிவுகளும், அரசியல் கொள்கைகளும்தான் காரணம்.  தமிழ் பேசும் மக்களை தேசிய இனமாக அங்கீகரிக்காத ஒடுக்குமுறைதான் இன்றைக்கு இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு காரணம். சிங்கள மக்களே, மகிந்த ராஜபக்சே குடும்பத்தினரை விரட்டி அடிக்கும் நிலைக்கு, அவர்களின் வீடுகளை தீக்கிரையாக்கும் அளவுக்கு அங்கு மக்களின் புரட்சி வெடித்திருக்கிறது.
கவர்னர்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை பற்றி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அந்த இயக்கத்தின் மீது வெறுப்பு அரசியலை விதைப்பதை கவர்னர் கைவிட வேண்டும்.  
இளையராஜா குறித்து பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி மீதும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதும் தேசிய எஸ்.சி.எஸ்.டி. ஆணையம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது பா.ஜனதா செய்யும் அரசியல் சித்துவிளையாட்டாகும். 
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் திருமாவேந்தன். மாநில துணை செயலாளர் அல்காலித், நிர்வாகி பகலவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் யூசுப் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்த திருமாவளவனிடம், நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்