தொழில் அதிபர் வீட்டில் 90 பவுன் நகைகள் மாயம்

சிவகாசி தொழில் அதிபர் வீட்டில் இருந்த 90 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-05-10 18:42 GMT
சிவகாசி, 
சிவகாசி தொழில் அதிபர் வீட்டில் இருந்த 90 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழில் அதிபர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள கோணம்பட்டியில் பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். 
மகன் தாமரைக்கண்ணன், செண்பகமூர்த்தியுடன் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
இந்தநிலையில் செண்பக மூர்த்தியின் வீட்டில் உள்ள பழைய இரும்பு பெட்டி மற்றும் பீரோவில் சுமார் 90 பவுன் நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
நகைகள் மாயம்
ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த நகைகளை வீட்டில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். அதன் பின்னர் நகைகளை சரிபார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்டியை பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த 90 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த செண்பகமூர்த்தி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. அதன் அருகில் இருந்த பழைய இரும்பு பெட்டியும் உடைக்கப்படவில்லை. ஆனால் அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மட்டும் மாயமாகி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டில் உள்ளவர்களிடம், அந்த பகுதியை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அனுப்பன்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்