107 கோடி பெண்கள், அரசு பஸ்களில் இலவச பயணம்

107 கோடி பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணித்துள்ளனர்.

Update: 2022-05-10 20:02 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி, முருக்கன்குடி ஆகிய கிராமங்களில் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நகர பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு என எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 107 கோடி பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணித்துள்ளனர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த மகளிர் சுய உதவிக்குழு பெரிய அளவில் வளர்ச்சியையும், வெற்றியையும் பெற்றுள்ளது.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓலைப்பாடி, நன்னை, முருக்கன்குடி மற்றும் கீழப்புலியூர் ஆகிய நான்கு கிராமங்களில் காதி நிறுவனத்தின் வாயிலாக 1960-ம் ஆண்டில் தொடங்கி செயல்பட்டு வந்த நெசவாளர் கூடங்கள், பின்னர் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் பெண்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் தனியார் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 400 பெண்கள் மற்றும் 50 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறையின் மூலம் ரூ.4 கோடி முதலீட்டில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் மூலம் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான வருவாய் ஈட்டக்கூடிய வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. சுயமாக சம்பாதிப்பதன் மூலம் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் பெண்கள் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் வகையில் இந்த சிறப்புவாய்ந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

மேலும் செய்திகள்