புழுதி பறக்கும் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

சேரன்மாதேவியில் புழுதி பறக்கும் சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-10 20:35 GMT
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியில் புழுதி பறக்கும் சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புழுதி பறக்கும் சாலை
சேரன்மாதேவி வியாபார சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், தலைவர் சங்கரநயினார், செயலாளர் அன்வர் உசேன் ஆகியோர் தலைமையில் சேரன்மாதேவி உதவி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து பாபநாசம் வரை தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் மண் கொட்டப்பட்டு, ஜல்லி கற்கள் பரப்பி தார் போடப்பட்டு வருகிறது. சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதியில் சாலை விரிவாக்கப் பணியானது கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் நடந்த சாலை விரிவாக்க பணியில், பத்தமடையில் ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விரைந்து முடிக்க வேண்டும்
இதனால் நடந்த போராட்டத்தால் கடந்த 5 நாட்களாக சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் சாலை விரிவாக்க பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் மண் கொட்டப்பட்ட இடங்களில் ஈரப்பதம் இல்லாமல் சாலை முழுவதும் புழுதியால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், சாலையோர கடைகள் வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலையில் மண் கொட்டப்பட்டுள்ள இடங்களில், காலை மாலை இருவேளையும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் பீய்ச்சி அடித்து புழுதி பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்