ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-05-11 01:07 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு, பணி செய்து வருகின்றனர். முன்பிருந்த தனியார் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு, அதன் பொறுப்பை வேறொரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது. இதில் அரசு மருத்துவமனையில் ஒரு மேலாளர், 2 மேற்பார்வையாளர்கள், 6 காப்பாளர்கள், ஒரு தோட்டக்காரர், 2 சமையலர்கள் உள்பட மொத்தம் 36 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்காததை கண்டித்து பணியை புறக்கணித்து மருத்துவமனை வெளியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ேபாது அவர்கள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் வாகனத்தை மறித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டார். அப்போது, பணியாளர்களுக்கு 11, 12 ஆகிய தேதிகளில் ஊதியம் வழங்கப்படும் என்று தனியார் நிறுவன பணியாளர்கள் முன்னிலையில் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்