உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூர் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-11 10:22 GMT
சென்னை,  

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு 2-வது யூனிட்டில் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வெள்ளம்பாக்கம் கிராமத்தின் அருகே உயரழுத்த மின் கோபுரங்கள் வழியாக மின் கம்பிகள் இணைக்கப்பட்டு அதன் வழியாக மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பலத்த காற்று மற்றும் மழையால் மின்சாரம் கொண்டு செல்லப்படும் மின் கோபுர உயரழுத்த கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட இன்சுலேட்டர் திடீரென வெடித்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 1,200 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டது. மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மின்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மின்வாரிய அதிகாரிகள் முகாமிட்டு உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்