200 மீட்டர் தூரத்துக்கு கடல்நீர் வெளியேறியது

வேதாரண்யத்தில், 2-வது நாளாக 200 மீட்டர் தூரத்துக்கு கடல்நீர் வெளியேறியது.

Update: 2022-05-11 14:17 GMT
வேதாரண்யம்;
வேதாரண்யத்தில், 2-வது நாளாக 200 மீட்டர் தூரத்துக்கு கடல்நீர் வெளியேறியது.
மீனவ கிராமங்கள்
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்ட, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம்,  கோடியக்கரை, கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று மாலை வங்கக்கடலில் புயல் மையம் கொண்டதன் எதிரொலியாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை 2-வது நாளாக வெளியேறியுள்ளது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அசானி புயல்
அசானி புயல் மையம் கொண்டதால் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடல் நீர் வெளியேறி உள்ளதால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை கரையிலிருந்து வெகு தூரம் தள்ளி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
சேறு கலந்த நீர்
கடல் சீற்றம் தணிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடல்நீர் வெளியேறுவதும், உள்வாங்குவதும் வழக்கம். தற்போது அசானி புயலால் கடல் சீற்றம் அடைந்து உள்ளதாலும் மாலை நேரத்தில் கடல் நீர் சுமார் 100 முதல் 200 மீட்டர் வரை வெளியேறுவதும் அதிகாலை அந்த நீர் கடலுக்குள் செல்வதும் வழக்கமாக உள்ளது. 
வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் காணப்படுகிறது. கடல்நீரும் தெளிவில்லாமல் சேறு கலந்த நீராக உள்ளது.
---

மேலும் செய்திகள்