சிங்கப்பூர் உள்துறை மந்திரி சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-05-11 15:02 GMT
பழனி: 

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவ்வப்போது வந்து பழனியில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகம்  காரைக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பழனிக்கு வந்தார். அவருடன் டி.வி.எஸ். குழும நிர்வாகி சுதர்சனும் வந்தார். இவர்கள் வந்த ஹெலிகாப்டர் இறங்குவதற்காக பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பிரத்யேகமாக ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது.

அங்கு வந்திறங்கிய மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகம், டி.வி.எஸ். குழும நிர்வாகி சுதர்சன் ஆகியோர் கார் மூலம் பழனி அடிவாரம் சென்றனர். அங்கிருந்து ரோப்கார் மூலம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகத்தை வரவேற்று மரியாதை செய்தனர். பின்னர் டி.வி.எஸ். குழுமம் சார்பில் ஆட்டோ ஒன்று பழனி கோவிலுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகம், டி.வி.எஸ். குழும நிர்வாகி சுதர்சன் ஹெலிகாப்டரில் கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்