திருவந்திபுரம் ஊராட்சி செயலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை கலெக்டர் உத்தரவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பதிவேட்டில் பணியாளர்கள் கையொப்பம் இல்லாததால் திருவந்திபுரம் ஊராட்சி செயலாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்

Update: 2022-05-11 16:06 GMT
கடலூர்

ஆய்வு

கடலூர் அருகே திருவந்திபுரம் ஊராட்சி கே.என்.பேட்டை மணிநகரில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத் தில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வரும் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஓட்டேரி வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துறை ரீதியான நடவடிக்கை

அதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்ட பணியாளர்களிடம் தனிநபர் வேலைக்கான இலவச அட்டை வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது வேலைக்கான பதிவேட்டில் பணியாளர்கள் கையொப்பம், புகைப்படம் இல்லாமல் இருந்ததை கலெக்டர் கண்டறிந்தார். இதையடுத்து திருவந்திபுரம் ஊராட்சி செயலாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதே போன்ற திட்டப்பணிகள் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்