இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி வாலிபரிடம் பணம் செல்போன் பறிப்பு

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி வாலிபரை பேச்சில் மயக்கி நூதன முறையில் பணம் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-05-11 16:09 GMT

சிவமொக்கா:

தனியார் நிறுவன ஊழியர்

  சிவமொக்கா மாவட்டம் சொரப் பகுதியில் வசித்து வருபவர் விவேக்(வயது 26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு இவருக்கு சாகர் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானார். பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர்

  இந்த சந்தர்ப்பத்தில் அந்த இளம்பெண் தனக்கு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி பிறந்தநாள் என்றும் அன்று நீங்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் விவேக்கிடம் கூறியுள்ளார். மேலும் எனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு விலை உயர்ந்த செல்போன் ஒன்றை பரிசாக அளித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

பூங்காவில் காத்திருந்தார்

  அவரது பேச்சில் மயங்கிய விவேக் கடந்த மாதம்(ஏப்ரல்) 24-ந் தேதி அன்று சாகரில் உள்ள அனலேகொப்பா பூங்காவிற்கு சென்று அந்த இளம்பெண்ணுக்காக காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த இளம்பெண் வரவில்லை. இதனால் விவேக் ஏமாற்றம் அடைந்து அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். 

அவர் தனது பெயர் போண்டா ரவி என்றும், தான் இளம்பெண்ணின் நண்பன் என்றும் கூறி விவேக்கிடம் அறிமுகமானார். மேலும் இளம்பெண் வர சற்று தாமதம் ஆகும் என்றும், அவர் வரும் வரை இருவரும் பேசிக்கொண்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதையடுத்து போண்டா ரவியிடம் விவேக் பேசிக்கொண்டிருந்தார்.

பணம் பறிப்பு

  இந்த சந்தர்ப்பத்தில் போண்டா ரவியின் செல்போனுக்கு அந்த இளம்பெண் பேசினார். அப்போது அவர் விவேக் உடனான பழக்கம் தனது தந்தைக்கு தெரிந்து விட்டதாகவும், அவர் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க சென்று இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுபற்றி அறிந்த விவேக் பதற்றம் அடைந்தார். சிறிது நேரத்தில் இஸ்மாயில் என்பவர் அங்கு வந்தார். அவர் தான் இளம்பெண்ணின் தந்தை என்றும், தனது மகளிடம் ஏன் பழகுகிறாய் என்றும் கூறி விவேக்கை சரமாரியாக தாக்கினார். இதற்கு விஸ்வநாத் என்பவரும் உடந்தையாக இருந்தார்.

  பின்னர் 3 பேரும் சேர்ந்து ரூ.20 ஆயிரம் கொடுத்தால் போலீசில் புகார் அளிக்காமல் விட்டு விடுவதாக விவேக்கிடம் கூறினர். ஆனால் விவேக் தன்னிடம் ரூ.3 ஆயிரம் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதையடுத்து அவர்கள் விவேக்கிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை பறித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

4 பேருக்கு வலைவீச்சு

  பின்னர் 2 நாட்கள் கழித்து விவேக்கை தேடி அவரது வீட்டுக்கே 3 பேரும் சென்றனர். அங்கு விவேக்கை சந்தித்த அவர்கள் அவரை மிரட்டி ரூ.10 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். இதனால் பாதிக்கப்பட்ட விவேக் இதுபற்றி சாகர் போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இளம்பெண் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்