தொலைந்துபோன 77 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம்

நாமக்கல் மாவட்டத்தில் தொலைந்து போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பரண்டு சாய் சரண் தேஜஸ்வி ஒப்படைத்தார்.

Update: 2022-05-11 16:17 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தொலைந்து போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பரண்டு சாய்  சரண் தேஜஸ்வி ஒப்படைத்தார்.
செல்போன்கள் மீட்பு
நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டது மற்றும் தொலைந்து போன செல்போன்களை மீட்டு தரக்கோரி பல்வேறு புகார்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேதபிறவி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முயற்சியால் இணையவழி குற்றங்கள் மூலம் இழந்த பணம் மற்றும் தொலைந்து போன செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, உரியவர்களிடம் பணம் மற்றும் செல்போன்களை ஒப்படைத்தார்.
இணையவழி குற்றங்கள்
அதன்படி நாமக்கல் லோகேஸ்வரன் என்பவருக்கு ரூ.1 லட்சம், பள்ளிபாளையம் நவீன்குமாருக்கு ரூ.76 ஆயிரத்து 629, நாமக்கல்லை சேர்ந்த ஜாபர் என்பவருக்கு ரூ.13 ஆயிரத்து 350, ராசிபுரம் கவுதம் என்பவருக்கு ரூ.24 ஆயிரத்து 500, திம்மநாயக்கன்பட்டி பிரபுவுக்கு ரூ.1,850, ராசிபுரம் கிஷோருக்கு ரூ.800 என இணையவழி குற்றங்கள் மூலம் இழந்த மொத்தம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 329 மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் தொலைந்து போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்களும் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, பொதுமக்கள் இணையவழி குற்றங்களில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், அதையும் மீறி பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 1930 என்கிற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் செய்திகள்