ரூ.50½ லட்சம் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.50 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

Update: 2022-05-11 16:18 GMT
நாமக்கல்:
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.50 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
நாமக்கல் தாலுகா மரூர்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி, பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை பார்வையிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று இன்னும் முடிவு பெறவில்லை. தற்போதும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அரசின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
பொது இடங்களில்  முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட அரசு அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 89 சதவீத பொதுமக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளார்கள். இன்னும் 11 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை.
உறுதிமொழி
சிறுமிகளுக்கு திருமணம் செய்ய கூடாது. இளம்வயது திருமணங்களை தடுத்திடும் வகையில், எங்கள் கிராமத்தில் குழந்தை திருமணம் செய்யமாட்டோம் என்று கிராமமக்கள் அனைவரும் சேர்ந்து உறுதிமொழி ஏற்க வேண்டும். கிராம பகுதிகளில் அரசின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் புகார்கள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வேளாண்மை துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறை, சித்த மருத்துவ துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
நலத்திட்ட உதவிகள்
முகாமில் 14பேருக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா உள்பட 88 பேருக்கு ரூ.50 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 
இதில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுமதி, மரூர்பட்டி ஊராட்சி  தலைவர் சுசிலா, வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜன், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகாராணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக என்ஜினீயர் நடராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்