வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித் திருவிழா

வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-05-11 16:47 GMT
அணைக்கட்டு

வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புஷ்பரத ஏரித்திருவிழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள பொற்கொடி அம்மன் புஷ்பரதஏரித் திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே வரத்தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் பசுந்தழை கட்டி, தென்னை ஓலைகளை கூடாரம் போல் அமைத்தும், டிராக்டர், வேன், ஆட்டோக்களிலும் குடும்பத்துடன் வந்தனர். 

விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மன் புஷ்ப ரதத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது. இதனையடுத்து வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம் ஆகிய கிராமங்களில் வாணவேடிக்கையுடன் புஷ்பரதம் உலாநடந்தது. புஷ்ப ரதத்தை விரதம் இருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஏரிக்கோவிலை பகல் 2.50 மணிக்கு வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏரியில் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏரியில் சேறும், சகதியுமாக இருந்ததால் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பக்தர்கள் ஆங்காங்கே உள்ள நிலத்தில் பொங்கல் வைத்தனர்.
விழாவிற்கு வந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் அழைத்து வந்து கால்நடைகளுடன் கோவிலை வலம் வந்து வழிபட்டனர். ஏரியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்ததாலும், காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததாலும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்ததால் பக்தர்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் தண்ணீர், மோர் வழங்கினர்.

முண்டியடித்த பக்தர்கள்

புஷ்ப ரதம் ஏரிக்கோவிலை வந்தடைந்தவுடன் தேர் மீது உப்பு, மிளகு, கோழி ஆகியவற்றை சூறையிட்டு வழிபட்ட பின்னர்  மூலவர் அம்மனை தரிசிக்க பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பெரும்பாலான பக்தர்கள் மூச்சு திணறினர். விழாக்குழுவினர் அவசரமாக செயல்பட்டு போலீசாரை வரவழைத்து பக்தர்கள் வெளியேறுவதற்கான வழியை சீரமைத்தனர்.

திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம்  சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் மா.ஜெயா, ஆய்வாளர் சுரேஷ் குமார், செயல் அலுவலர் ம.சசிகுமார், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் சங்கர், வல்லண்டராமம் ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், சுதாகரன், துணைத் தலைவர் பிரத்தி வெங்கடேசன் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஞானம், அணைக்கட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஷங்கர். கோவில் கணக்கர்கள் ஆறுமுகம், ஆனந்தன் மெய்காப்பாளர் சரவணன் மற்றும் வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்