வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வீட்டில் புதைத்துவிட்டு மாயமான தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-05-11 18:02 GMT
உளுந்தூர்பேட்டை, 

சேத்தியாத்தோப்பில் பீகார் மாநிலம் லக்கிஸ்சதாய் பகுதியை சேர்ந்த பவன்குமார்(வயது 22) தனது உறவினர்களுடன் வீடுகளை வாடகை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகி்ன்றனர். 
இந்த நிலையில் பவன்குமார் மற்றும் பீகார் மாநிலம் ஹரிக் பகுதியை சேர்ந்த அமித் (29), சவுரவ்குமார் (27) ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் (வயது 50) என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு சென்றனர். 

துன்புறுத்தல் 

இவர்கள் அந்த புதிய வீட்டின் மாடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சவுரவ்குமார் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முடிந்துவிட்டு தான் வசித்து வந்த சேத்தியாத்தோப்புக்கு சென்று விட்டார். மற்ற 2 பேரும் அங்கு வேலை செய்து வந்தனர். பவன்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னிடம் அமித் அடிக்கடி தகராறு செய்து, துன்புறுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். 

கழுத்தை அறுத்துக்கொலை 

இந்த நிலையில் அவரது செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேற்று மாம்பாக்கத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு பவன்குமார் உள்பட 2 பேரையும் காணவில்லை. 
மாறாக ரமேஷ் கட்டிவரும் வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் அருகில் ரத்தக்கறை படிந்த சட்டை கிடந்தது. மேலும் அங்கு குழிதோண்டி மூடப்பட்ட நிலையில் அதன் மீது ரத்தக்கறை படிந்து இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ரத்தக்கறை படிந்த இடத்தை தோண்டினர். அங்கு பவன்குமார், பிணமாக மீட்கப்பட்டார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. 

உடல் புதைப்பு 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், பவன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பவன்குமாருடன் ஏற்பட்ட தகராறில் அவரது கழுத்தை அறுத்து அமித் கொலை செய்ததும், கொலையை மறைக்க பவன்குமாரின் உடலை குழிதோண்டி புதைத்து விட்டு அமித் தலைமறைவானதும் தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்