ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரத்தம்: அரிய வகை ரத்தம் உடைய இளம்பெண்ணுக்கு சிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது

அரிய ரத்த வகை உடைய இளம்பெண்ணுக்கு தேவையான ரத்தம் ரெயிலில் கொண்டு வரப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது.

Update: 2022-05-11 18:04 GMT
புதுக்கோட்டை:
ரத்த சோகை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த பாலமுருகனின் மனைவி சித்ரா (வயது 22). இவர் 2 மாத கர்ப்பமாக இருந்தார். இவருக்கு தீவிர ரத்த சோகை இருந்ததால் கடந்த 5-ந் தேதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு மறுநாள் அனுப்பி வைக்கப்பட்டார். 
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு அரிய ரத்த வகையான பாம்பே ரத்த வகை இருந்ததை மருத்துவக்குழுவினர் கண்டுபிடித்தனர். இந்த ரத்த வகையானது 10 ஆயிரம் போ்களில் 1 நபருக்கு இருக்கும் அரிய வகையாகும். மேலும் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை கண்டறிந்தனர். எனவே அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரத்தம்
மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதியின் வழிகாட்டுதலின்படி சிகிச்சை முறை வகுக்கப்பட்டது. இணை பேராசிரியர் மருத்துவர் உஷா, ரத்த வங்கி மருத்துவர் கிஷோர் குமார், செவிலியர் செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட குழுவினர் அரிய பாம்பே வகை ரத்தம் தமிழ்நாட்டில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் அதனை சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கடந்த 7-ந் தேதி இரவு புதுக்கோட்டைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தனர். 
மேலும் ரெயிலில் கொண்டுவரப்பட்ட ரத்தத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் சித்ராவுக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் கடந்த 10-ந் தேதி அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. பின்னர் முதல் யூனிட் பாம்பே ரத்த வகை செலுத்தப்பட்டது. 2-வது யூனிட் ரத்தம் தேவைப்பட்டதால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தற்போது இருப்பதை கண்டறிந்து அதனை கார் மூலமாக புதுக்கோட்டைக்கு கொண்டு வந்தனர். அந்த ரத்தத்தையும் சித்ராவுக்கு செலுத்தினர். தற்போது அவரது உடல்நலம் முன்னேற்றம் கண்டு வருகிறது. உரிய நேரத்தில் சரியான முறையில் மருத்துவக்குழுவினர் செயல்பட்டனர்.
மருத்துவக்குழுவினர்
நோயாளியை காப்பாற்ற விரைந்து செயல்பட்ட ரத்த வங்கி குழுவினரையும், நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவ துறைத்தலைவர் அமுதா தலைமையிலான மகப்பேறு மருத்துவ குழுவினரையும், மருத்துவ துறை தலைவர் கிருஷ்ணசாமி பிரசாத் தலைமையிலான மருத்துவ குழுவினரையும், சிறுநீரக சிகிச்சை துறை தலைவர் சரவணகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரையும், மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார். 
மேலும் உரிய நேரத்தில் அரிய வகை ரத்தம் வழங்கி உயிர் காக்க உதவிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கும் சித்ரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்