குமரியில் பலத்த காற்றுடன் மழை;நாகர்கோவிலில் 2 மரங்கள் சாய்ந்தன

குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நாகர்கோவிலில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன.

Update: 2022-05-11 18:21 GMT
நாகா்கோவில், 
குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நாகர்கோவிலில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன.
பலத்த காற்றுடன் மழை
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. அதிலும் நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக பெய்த மழை பலத்த மழையாக மாறியது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்தது. மழை காரணமாக சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் பெருகியது. மேலும் மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியதால் 2 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதாவது வடசேரி அம்மா உணவகம் அருகே ஒரு மரமும், கற்கோவில் அருகே ஒரு மரமும் முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றினர்.
மழை அளவு
இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு பகுதியில் 19 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதேபோல பூதப்பாண்டி-3.2, களியல்-6, கன்னிமார்-2.2, கொட்டாரம்-1.4, குழித்துறை-8, மயிலாடி-3.2, நாகர்கோவில்-10, புத்தன்அணை-7.4, சுருளகோடு-2.6, தக்கலை-13.3, குளச்சல்-3.4, இரணியல்-4, பாலமோர்-7.4, ஆரல்வாய்மொழி-1, குருந்தன்கோடு-4, முள்ளங்கினாவிளை-18.2, ஆனைக்கிடங்கு-17 மி.மீ. என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-3, பெருஞ்சாணி-8.2, சிற்றார் 1-2.2, சிற்றார் 2-1.4, முக்கடல்-4 மி.மீ. என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 155 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 91 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு ஒரு கனஅடி தண்ணீரும் வந்தது.

மேலும் செய்திகள்