களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானை அட்டகாசம்

Update: 2022-05-11 19:45 GMT
களக்காடு:
ஒற்றை காட்டு யானை
களக்காடு அருகே சிதம்பரபுரம் அகலிகை சாஸ்தா கோவில் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தோட்டத்தில் புகுந்த காட்டு யானையானது 5 தென்னை மரங்களையும், 5 பனை மரங்களையும் வேரோடு சாய்த்து, அவற்றின் குருத்துகளை தின்று சேதப்படுத்தியது. 
பின்னர் அருகில் உள்ள சந்திரங்காட்டிற்கு சென்ற யானையானது அங்கிருந்த பனை மரத்தை சாய்க்க முயன்றது. அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் பட்டாசு வெடித்ததால் யாைன வனப்பகுதி நோக்கி ஓடியது. யானை நடமாட்டத்தால் இரவில் தோட்டங்களில் தங்கியுள்ள பனை தொழிலாளர்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
வனவிலங்குகள் புகாதவாறு...
களக்காடு மலையடிவார கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சிவபுரம், கள்ளியாறு பகுதிகளில் முகாமிட்டுள்ள சிறுத்தையானது நாய்களை வேட்டையாடியும், காமராஜ்நகர், மஞ்சுவிளை, கீழவடகரை, சிதம்பரபுரம் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள கரடிகள் வாழைகளை நாசம் செய்தும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. சிதம்பரபுத்தில் கரடி கடித்து குதறியதில் தொழிலாளி சக்திவேல் படுகாயம் அடைந்தார்.
இதுதவிர கடமான், பன்றிகளும் விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் புகாதவாறு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்