கச்சார்குளக்கரையில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் அவலம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள கச்சார்குளக்கரையில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் அவலம் உள்ளது. இதனை தடுக்க மீன் விற்பனையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-11 20:08 GMT
திருவிடைமருதூர்:
திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள கச்சார்குளக்கரையில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் அவலம் உள்ளது. இதனை தடுக்க மீன் விற்பனையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சார்குளம்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு ஸ்தலமான நாகநாதசாமி கோவில், தமிழக திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் என 2 பிரசித்திபெற்ற கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களுக்கு. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். 
கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் மிகப்பெரிய கச்சார் குளம் உள்ளது பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி ஆர்.வி. நகருக்கு செல்லும் சாலை உள்ளது. இதன் வழியாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினசரி வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். 
குளக்கரையில் கொட்டப்படும் மீன் கழிவுகள்
இந்த சாலையில் தினசரி மீன் கடைகள் போடுகின்றனர் மீன் விற்பனை செய்யும்போது குளக்கரையில் அமர்ந்து மீன்களை சுத்தம் செய்து கொடுக்கின்றனர். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட மீன் கழிவுகளையும், வீணாகிப்போன மீன்களையும் அப்படியே அங்கேேய போட்டு விட்டு சென்று வருகின்றனர். இதனால் அந்த வழியாக வாகனங்களிலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த கழிவுகளினால் ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படலாம் என அச்சப்பட்டு அந்த வழியாக செல்வதற்கே பொதுமக்கள் தயங்கி வருகிறார்கள்.
வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
எனவே இங்கு நடைபெறும் மீன் விற்பனையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்