3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-05-11 20:22 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மணல் கடத்தல்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதையும் மீறி மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த திருவையாறு அருகேயுள்ள லிங்கத்தடிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி (வயது 56), நெய்வேலி வடபாதியைச் சேர்ந்த அண்ணாதுரை (54), சசிகுமார் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்