ஆட்டையாம்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது

ஆட்டையாம்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-11 20:54 GMT
சேலம்,
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டர்குலமாணிக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சரக்கு வாகனத்துடன் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து சரக்கு வாகன டிரைவரான ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் மணிவண்ணனும், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஒருவரும் சேர்ந்து ஆட்டையாம்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டிரைவர் மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்