தாய்-மகள் கொலை வழக்கில் உறவுக்கார வாலிபர் கைது

உடுப்பி அருகே தாய்-மகள் கொலை வழக்கில் உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணத்துக்கு மறுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2022-05-11 21:20 GMT
மங்களூரு:

தாய்-மகள் கொலை

  உடுப்பி மாவட்டம் ஹிரியடுக்கா போலீஸ் எல்லைக்குட்பட்ட அத்ராடி கிராமம் மதகா பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 28). இவரது மகள் பிரியா (10). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஹிரியடுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தாய், மகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

  மேலும் செல்வியின் உறவினரான சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த ஹரிஷா என்கிற கணேசா (29) அடிக்கடி செல்வி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருமணத்துக்கு மறுத்ததால்...

  கணேசாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. அவர் செல்வியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கணேசா செல்வியை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதுகுறித்து செல்வியிடம் கணேசா கூறியுள்ளார். ஆனால் அதற்கு செல்வி மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று கணேசா செல்வி வீட்டிற்கு சென்றுள்ளார்.

  அப்போது செல்வி செல்போனில் மற்றொரு நபருடம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசா, செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும், அவரது மகளையும் கொன்று விட்டு, செல்வி அணிந்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
  இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

வாலிபர் கைது

  இதையடுத்து போலீசாா் கணேசாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் தாய்-மகள் கொலை வழக்கு 48 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. பலரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்