‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-14 21:21 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பராமரிப்பற்ற பூங்கா
பாளையங்கோட்டை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்து கிரசண்ட் நகரில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. பூங்காவுக்கு வேலி அமைக்காததால் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. பூங்கா வளாகத்தில் சீமைக்கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே பயன்பாடற்ற பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
-நிஜாம், கிரசண்ட் நகர்.

குடிநீர் குழாயில் உடைப்பு 
பாப்பாக்குடி யூனியன் ரங்கசமுத்திரம் பஞ்சாயத்து சுப்பிரமணியபுரம் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே குழாய் உடைப்பை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-எபனேசர், ரங்கசமுத்திரம்.

வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?
ஏர்வாடி நகரில் 8 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. ஆனால் அவற்றில் வெள்ளைநிற வர்ணம் பூசாததால், இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?
-சலாகுதீன், ஏர்வாடி.

சாய்ந்த மின்கம்பம்
ராதாபுரம் தாலுகா பழவூர் சிதம்பரபுரம் பஞ்சாயத்து சிதம்பரபுரம் வடக்கு கூத்தார்குளத்தின் நடுவில் உள்ள மின்கம்பம் சாய்ந்தவாறு உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சரிந்து தண்ணீருக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-முருகன், சிதம்பரபுரம்.

சாலை விபத்து அபாயம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தம் அருகில் மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை பள்ளம் தோண்டி சீரமைத்தனர். பின்னர் அந்த பள்ளத்தை சரியாக மூடாமல், அங்கு 3 அடி உயரத்துக்கு மண்ணை குவித்து வைத்து, அதில் முள்வேலி அமைத்துள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை முறையாக மூடி சீரமைக்க வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.

தெருநாய்கள் தொல்லை
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி ரோடு, அரண்மனை முப்புடாதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-சிவசைலம், ஆழ்வார்குறிச்சி.

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
கடையம் அருகே மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தபிள்ளையூரில் இருந்து அம்பைக்கு தினமும் அதிகாலை 5 மணிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதேபோன்று அம்பையில் இருந்து கருத்தப்பிள்ளையூருக்கு இரவில் இயக்கப்பட்ட டவுன் பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே அந்த பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

பயணிகள் நிழற்குடை தேவை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா புதுக்குளம் பஞ்சாயத்து சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-ஜெயமுருகன், புதுக்குளம்.

பழுதடைந்த அடிபம்பு
சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் உள்ள அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-கார்த்திக், அமுதுண்ணாக்குடி.

சேதமடைந்த மின்கம்பம்
எட்டயபுரம் தாலுகா சுரைக்காய்பட்டி பஞ்சாயத்து ரணசூர்நாயக்கன்பட்டி வடக்கு தெரு சந்தனமாரியம்மன் கோவில் அருகில் மின்மாற்றி பக்கத்தில் உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-கோபிநாத் தங்கமாரியப்பன், ரணசூர்நாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்