விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

தேனி மாவட்டத்தில் விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Update: 2022-05-15 16:12 GMT
கூடலூர்: 

தேனி விதை சான்று மற்றும் அங்கக சான்று வேளாண் உதவி இயக்குனர் திலகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 கலப்பு பயிர்களை விதைப்பண்ணையில் இருந்து அகற்றுவது மிக முக்கியமான ஒன்றாகும். விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகள் அதிக அளவில் விதைகளை வாங்கும்போது அனைத்து மூட்டைகளும் ஒரே ரகமாக உள்ளனவா என்பதை கவனித்து  வாங்க வேண்டும். 2 அல்லது அதற்கு மேற்பட்ட ரகங்கள் வாங்கும்பொழுது அவைகளை தனித்தனியே வைத்து பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமாக நாற்று விடுவதற்கு தயார் செய்யும்பொழுது பிற ரகங்கள் கலந்துவிடாமல் இருக்க வெவ்வேறு தேதிகள், மாற்று இடங்களில் நாற்று நட வேண்டும். நடவு முடிந்து மீதமாகும் நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கலப்பு பயிர்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். நன்கு முற்றிய நெற்பயிரினை ரகம் வாரியாக தனித் தனியே அறுவடை செய்து, உலர வைக்க வேண்டும். முக்கியமாக கதிரடிக்கும் எந்திரம் மற்றும் உலர வைக்கும் களத்தினை முழுமையாக சுத்தம் செய்து அதன் பின்பு அப்பணிகளை தொடர வேண்டும். இவ்வாறு நன்கு உலர வைத்த விதைகளை புதிய சாக்கு மூட்டைகளில் வைத்து, அதன் மேல் பகுதியில் ரகத்தின் பெயரை தெளிவாக குறிப்பிடவேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றினால் விதை உற்பத்தியில் பிறரக பயிர்கள் கலப்பதை தவிர்த்து தரமான விதைகளை உற்பத்தி செய்து அதிக மகசூல் பெறலாம். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்