பெங்களூருவில் எம்.ஜி.ஆர். பெயரில் இலவச மருத்துவமனை அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது; சைதை துரைசாமி உருக்கம்

பெங்களூருவில் எம்.ஜி.ஆர். பெயரில் இலவச மருத்துவமனை அமைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சைதை துரைசாமி உருக்கமாக கூறினார்.

Update: 2022-05-15 21:32 GMT
பெங்களூரு:

மருத்துவமனை திறப்பு விழா

  பெங்களூரு ஸ்ரீராமபுரம் அம்பேத்கர் நகர் 5-வது மெயின் ரோடு 6-வது கிராசில் ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் புதிதாக இலவச மருத்துவமனை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையும் அவர் பார்வையிட்டார்.

  முன்னதாக விழா மேடையில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது எம்.ஜி.ஆர். நலிவுற்றோர் அறக்கட்டளை தலைவர் எம்.ஜி.ஆர்.ரவி, சமூக சேவகர் எம்.ஏ.பழனி, விழா குழுவினர்கள் சடகோபன், மனோகரன், எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஏனோ ஜார்ஜ் ஹெண்டே, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகத்தை சேர்ந்த அனைத்து எம்.ஜி.ஆர். அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆரின் பக்தர்கள் கூட்டம்

  பெங்களூரு நகரில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பெயரில் இலவச மருத்துவமனை அமைக்கப்பட்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனையை திறந்து உள்ள எம்.ஏ.பழனிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டை போன்று கர்நாடகத்திலும் எம்.ஜி.ஆருக்கு பெரிய ஆதரவாளர்கள் கூட்டம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று அவரது ஆதரவாளர்கள் ஏழை, எளிய மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்பதை நான் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்.
  
ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆர். ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அவர் எப்போதும் மக்களின் தலைவர். அவர் காட்டிய வழியில் நான் இன்று வரை நடக்கிறேன்.

கொடுத்த வாக்குறுதியை...

  நான் முதன்முதலாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின்னர் எம்.ஜி.ஆரை சந்தித்த போது, சென்னை மாநகராட்சியின் முதல் அ.தி.மு.க. மேயர் நீ தான் என்று கூறினார். ஆனால் அவர் கூறி 30 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மாநகராட்சி தேர்தல் நடந்தது.

  ஆனால் அதற்குள் எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார். இதனால் மேயர் பதவி கிடைக்குமா? என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. ஆனாலும் எம்.ஜி.ஆரின் சிந்தனையில் உதித்த நான் ஜெயலலிதா மூலம் சென்னை மாநகராட்சி முதல் அ.தி.மு.க. மேயராக பதவி ஏற்றேன். உயிருடன் இல்லாதபோதும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று காட்டியவர் எம்.ஜி.ஆர்.. அவர் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
  இவ்வாறு அவர் பேசினார்.

  இதன்பின்னர் ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகப்பைகளை சைதை துரைசாமி வழங்கினார். இதனை தொடர்ந்து விழா குழுவினர் சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவித்து கவுரவித்தனர். மேலும் நினைவு பரிசும் வழங்கினர்.

மேலும் செய்திகள்