பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ 12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ 12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்

Update: 2022-05-16 18:18 GMT

கள்ளக்குறிச்சி

குறைதீர்ப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை, கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 321 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, அதன்மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

நலத்திட்ட உதவி

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மதிப்புள்ள பிரெய்லி கைக்கடிகாரம் 8 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளின் தொழில் மேம்பாட்டுக்கு கலெக்டரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை ஒருவருக்கும், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால் அவயம் ஒருவருக்கும், 10 பேருக்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொழிற் கடன்

தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி மூலம் பயனாளி ஒருவருக்கு தாட்கோ மானியத்துடன் ரூ.7 லட்சத்து 73 ஆயிரத்து 280 தொழிற்கடன் உதவிக்கான காசோலையையும், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 7 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 312-க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, வேளாண் இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள்துறை அலுவலர் தீபிகா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) ராஜவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்