உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்

திருக்கோவிலூரில் பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரிக்க வலியுறுத்தி உறவினர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-16 18:51 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரை அடுத்த டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் கோகுல்(வயது 17). இவர் சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரை அவருடன் படித்து வந்த 17 வயதுடைய சக மாணவர் ஒருவர் விருந்து இருப்பதாக அழைத்து சென்று வெட்டிக் கொலை செய்தார்.

தன்னுடன் படித்த ஒரு மாணவரை சக மாணவரே வெட்டிக் கொலை செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிந்து அந்த மாணவரை கைது செய்து கடலூர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

2-வது நாளாக மறியல்

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் மாணவர் கோகுலை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொலை செய்திருக்கலாம். எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோகுலின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று 2-வது நாளாக டி.கீரனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கோகுலுடன் படிக்கும் சக மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது கொலை வழக்கில் உரிய விசாரணை வேண்டும், தனிப்படை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனி (திருக்கோவிலூர்), திருமேனி (சைபர் கிரைம் பிரிவு) ஆகியோர் தலைமையில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தனிப்படை அமைப்பு

இதில், மாணவர் கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பதை அறிய மாவட்ட சைபர் கிரைம் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரணை நடத்தி ஓரிரு நாளில் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்