மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் சாவு: இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் இறந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-16 19:35 GMT
அன்னவாசல்:
மாணவர் சாவு 
புதுக்கோட்டை மாவட்டம், முத்துடையான்பட்டி அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் குணால் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் கடந்த 13-ந்தேதி புதுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியார் நகர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், குணால் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியது.
இதில் படுகாயமடைந்த குணால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடந்த 13-ந் தேதி புதுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் விபத்து ஏற்பட காரணமாக இருந்ததாக குணாலின் பெயரையும் சேர்த்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குணால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று குணாலின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும், சம்பவத்தன்று குணாலை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆனால் போலீசார் இதனை விபத்து வழக்காக முடித்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய வேண்டும் என்று கூறி முத்துடையான்பட்டி புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாணவனின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி மற்றும் அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்