தமிழகத்தை கலக்கிய கொள்ளையன் கூட்டாளியுடன் கைது

மதுரை அருகே நடந்த 77 பவுன் நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-16 21:54 GMT
மதுரை,
மதுரை அருகே நடந்த 77 பவுன் நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகை கொள்ளை
மதுரை மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஒத்தக்கடை மற்றும் கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 2 வீடுகளை உடைத்து சுமார் 77 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் மணிகண்டன்(வயது 45) மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன்(26) ஆகியோர்களுக்கு இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 77 பவுன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
100 வழக்குகள்
தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதில் மணிகண்டன் என்பவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார். இதேபோல் மதுரை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்