மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை

மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-05-17 15:22 GMT

மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் அருகே உள்ள ஐ.டி.ஐ. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் என்.எல்.சி.யில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கீதா. 

இந்த பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் கடந்த 30 நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது. இதனால், இரவு நேரத்தில்  சார்ஜ் ஏற்றி பயன்படுத்தும் எல்.இ.டி. மின்விளக்கை பாலசுப்பிரமணியன் வீட்டில் பயன்படுத்தி வந்தனர்.
நேற்று காலை முதற்கட்ட பணிக்கு பாலசுப்பிரமணியன் சென்றுவிட்டார்.

 தொடர்ந்து காலை 10 மணிக்கு எல்.இ.டி. மின் விளக்குக்கு சார்ஜ் போடுவதற்காக பழைய நெய்வேலியில் உள்ள ஒருவரது  வீட்டுக்கு கீதா சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தார். 

நகை- பணம் கொள்ளை

அப்போது, கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில்,  வீட்டில் இருந்த பீரோ கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கீதா, மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், பீரோவில் இருந்த 3¼ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியன கொள்ளை போனது தெரியவந்தது.

வலைவீச்சு

 இந்நிலையில் கடலூரில் இருந்து மோப்பநாய்  கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி மந்தாரக்குப்பம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.  மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களையும் தடவியல் நிபுணர்கள் சேகரித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

30 நாட்களாக மின்சாரம் இல்லை

ஏற்கனவே இந்த பகுதியில் என்.எல்.சி. நிர்வாகம் மின்சாரத்தை துண்டித்துள்ளது. இதனால் 30 நாட்களுக்கு  மேலாக மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகிறார்கள். 

இதுபோன்ற நிலையில், தற்போது கொள்ளை சம்பவமும் நடந்தேரி இருக்கிறது. இது மக்களை மேலும் அச்சமடைய செய்துள்ளது. எனவே இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்