கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

Update: 2022-05-18 16:29 GMT
கடலூர், 

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் நிலவுவதால் தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் தூறிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு மீண்டும் வெயில் அடித்து.
பின்னர் பிற்பகல் 3.30 மணி அளவில் திடீரென மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. இதேபோல் சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வெயிலுக்கு மத்தியிலும் மழை பெய்து, பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்