காஷ்மீரில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 100 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2022-06-13 03:38 GMT

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலங்களாக இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்டோர் மீது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை முன்னிட்டு பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திராப்கம் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஏறக்குறைய 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைகாஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் தெரிவித்து இருந்தனர்.

இதனால், நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் படையினரின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளின் விளைவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 100 ஆகியுள்ளது.

ஒருபுறம், காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு படை தொடர்ந்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்போது, பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் முயற்சி மற்றும் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு இழுக்கும் செயலும் தொடருகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 158 பயங்கரவாதிகள் இன்னும் உள்ளனர் என்றும் ராணுவ வட்டாரம் தெரிவித்து உள்ளது.

அவர்களில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் (83 பயங்கரவாதிகள்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் தவிர, ஜெய்ஷ் பயங்கரவாதிகள் (30 பேர்) மற்றும் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் (38 பேர்) உள்ளனர் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்