கர்நாடகத்தில் வருமான வரித்துறை சோதனையில் 16 கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 கோடி நகை-பணம் சிக்கியது

கர்நாடகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 16 கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 கோடி நகை, பணம் சிக்கி இருந்தது. சட்டசபை தேர்தலையொட்டி ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-04-13 00:15 IST

பெங்களூரு:

16 கூட்டுறவு வங்கிகளில் சோதனை

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள வங்கிகளில் நடைபெறும் பண பரிமாற்றத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்திருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி கர்நாடகத்தில் 16 கூட்டுறவு வங்கிகளின் கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தார்கள்.

இந்த சோதனையின் போது வங்கிகளில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள். அதே நேரத்தில் வங்கிகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது கணக்கில் வராமல் பணம், நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, ரூ.3.3 கோடி ரொக்கம், ரூ.2 கோடிக்கு தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருந்தனர்.

ரூ.1,000 கோடி முறைகேடு

அதே நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் நடந்த பண பரிமாற்றம், சிக்கிய ஆவணங்கள் மூலமாக ரூ.1,000 கோடிக்கு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அந்த கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் தொழில்அதிபர்கள், பெரிய வியாபாரிகளின் வங்கி கணக்குகளில் இருந்து, வேறு சில வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டு இருந்தது. செயல்படாத நிறுவனங்களின் பெயரிலான காசோலைகளை உருவாக்கி, அதில் எழுதும் போது கே.ஒய்.சி. விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தது.

குறிப்பாக வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக வியாபாரிகள், தொழில்அதிபர்கள் இந்த கூட்டுறவு வங்கிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்த பணத்தை, ரொக்கமாக எடுத்து வியாபாரிகள் மட்டும் இல்லாமல் ரியல்எஸ்டேட் அதிபர்கள், கட்டிட காண்டிராக்டர்களுக்கு மாற்றி இருப்பதற்கான ஆதாரங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்காக...

அத்துடன் கூட்டுறவு வங்கிகளில் கிடைத்த ஆவணங்களின் மூலம் பல்வேறு நபர்களுக்கு ரூ.15 கோடி கடன் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடன் பெற்றவர்களிடம் இருந்து முறையான ஆவணங்களை கூட்டுறவு வங்கிகள் வாங்காமல் கடனை கொடுப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் வங்கிகளில் நடக்கும் பண பரிமாற்றத்தை கண்காணித்து வந்த நிலையில், அதற்கு முன்பாக கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தி கொண்டு ரூ.1000 கோடிக்கு சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்பதால், அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்