இந்திய தேசியக் கொடியை அடுத்து அமேசானில் மகாத்மா காந்தி அவமதிப்பு

இந்திய தேசியக் கொடியை அடுத்து அமேசானில் காந்தி புகைப்படம் அடங்கிய காலணி விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-01-15 03:42 GMT
புதுடெல்லி, 

அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், “அமேசான் முதலில் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்கவேண்டும். அமேசான் நிறுவனம் எங்களது தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான அனைத்து பொருட்களை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். 

இது உடனடியாக செய்யப்படவில்லை என்றால் நாங்கள் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்க மாட்டோம். முன்னதாக வழங்கப்பட்ட விசாக்களையும் ரத்து செய்வோம்,” என்று எச்சரித்தார். 

சுஷ்மா எச்சரிக்கையை அடுத்து இந்திய தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

  அமேசான் நிறுவனம் தேசியக் கொடி போன்ற கால் மிதியடிகள் அனைத்தையும் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சையானது எழுந்து உள்ளது. அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் அடங்கிய காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவமும் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்கள் அமேசானுக்கு எதிராக கடும் கண்டனத்தை எழுப்பிஉள்ளனர். சமூக வலைதளங்களில் அமேசான் மீதான விமர்சனம் அதிகரித்து உள்ளது. டுவிட்டர் பயனாளர்கள் இவ்விவகாரத்தை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் கணக்குடன் டேக்கிங் செய்து உள்ளனர். 

காலணி விவகாரம் தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இருந்து நேரடியான கருத்து எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக அமேசான் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்