கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு?

குஜராத்தின் கோத்ரா ரெயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்.6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.;

Update:2017-10-09 04:15 IST

ஆமதாபாத்,

குஜராத்தின் கோத்ரா ரெயில் நிலையத்தில் கடந்த 2002–ம் ஆண்டு பிப்ரவரி 27–ந்தேதி அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்.6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதில் ஏராளமான கரசேவகர்கள் உள்பட 59 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் மூண்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு 31 பேருக்கு தண்டனை விதித்து கடந்த 2011–ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 63 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அதை எதிர்த்தும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மாநில அரசு சார்பிலும் குஜராத் ஐகோர்ட்டில் பின்னர் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த விசாரணை முடிவடைந்து இருக்கும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்