காங்கிரஸ் மீது பிரதமர் மோடி காட்டம்; முத்தலாக் மசோதாவில் அதிகமான குறைகள் உள்ளன - ஏஐஎம்பிஎல்பி

முத்தலாக் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில் ஒரு இந்து இரண்டு முறை திருமணம் செய்தால் சிறைக்கு செல்கிறார்கள் என்றார்.

Update: 2018-02-08 13:06 GMT

ஐதராபாத்,


முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரித்தது.

ஆனால், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’   பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் பாரதீய ஜனதாவிற்கு பெரும்பான்மை இல்லாததால் முடங்கியது. 

முத்தலாக் மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்துவிட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா அரசு ஸ்திரமாக உள்ளது.

பிரதமர் மோடி பேச்சு

மாநிலங்களவையில் காங்கிரஸ் மசோதாவை தாக்கல் செய்ய ஏற்கனவே உதவி செய்யவில்லை. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத் திங்கள் கிழமை பேசுகையில் “நீங்கள் சன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களை பிரித்துவிட்டீர்கள், இப்போது மனைவி மற்றும் கணவரை பிரிக்கிறீர்கள். கணவரை சிறையில் அடைத்துவிட்டு, மனைவியிடம் அவரை காப்பாற்றியதாக கூறுவீர்கள். நாங்கள் முத்தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம், அதனை கிரிமினல் குற்றமாக்குவதை நாங்கள் ஆதரிக்கவில்லை,” என்றார். 

 இந்நிலையில் காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒரு இந்து இரண்டு முறை திருமணம் செய்தால் சிறைக்கு செல்கிறார்,” என சுட்டிக்காட்டினார். 

  “கடந்த மூப்பது ஆண்டுகாலமாக இந்த சட்டத்தை கொண்டுவருவதில் காங்கிரஸை எது தடுத்து நிறுத்தியது?” என கேள்வியையும் எழுப்பினார். 

 “ஒரு இந்து இரண்டு முறை திருமணம் செய்தால், சிறைக்கு செல்கிறார். அவருக்கு தண்டனை உள்ளது. அவருடைய குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்பது தொடர்பாக நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை. “அங்கு தண்டனை உள்ளதா.” என கோடிட்டு காட்டினார். ஷா பனோ வழக்கில் 1985-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உத்தரவு பாராளுமன்றத்தில் எழுப்பட்டதை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “இதுபோன்ற சட்டத்தை 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கொண்டுவருவதற்கு உங்களை(காங்கிரஸ்) தடுத்தது என்ன? சொந்த கட்சியை சேர்ந்த மந்திரியே எழுப்பிய போது முத்தலாக் முறையை அனுமதித்தது ஏன்?” என காங்கிரசுக்கு சரமாரியான கேள்வியையும் எழுப்பினார். 

குறைகள் உள்ளன

முத்தலாக் தடை மசோதாவை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மசோதாவில் அதிகமான குறைகள் உள்ளன என குற்றம் சாட்டி உள்ளது.

“ஒரு மிகவும் தவறான சட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறிஉள்ளது.

 “இந்த உலகிலேயே இதுபோன்ற சட்டம் கிடையாது. மிகவும் தவறான ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பதில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஸ்திரமாக உள்ளது,” என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செய்தி தொடர்பாளர் மவுனாலா காலில்-உர்-ரகுமான் கூறிஉள்ளார். வாரியம் சட்டத்திற்கு எதிராக இல்லை, அதில் உள்ள குறைபாடுகளை தீர்க்க வேண்டும் என்பது மட்டும்தான். மசோதா இப்போது உள்ள வடிவில் தாக்கல் செய்ய முடியுமா என்பதை எதிர்க்கட்சிகள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்